Sunday, May 25, 2014

"சனிக்கிழமை மீன் பிடிக்க தடை" _யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 25.05.2014 அன்று  சகோ.தீன்   அவர்கள் "சனிக்கிழமை மீன் பிடிக்க தடை" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

146. சனிக்கிழமை மீன் பிடிக்கத் தடை ஏன்?

சனிக்கிழமைகளில் மீன் பிடிக்கக் கூடாது என்று யூதர்களுக்கு ஒரு காலத்தில் கட்டளையிடப்பட்டிருந்தது. இக்கட்டளை அவர்கள் இணைவைத்ததற்குத் தண்டனையாகவே இடப்பட்டிருந்தது என இவ்வசனம் (16:124) கூறுகிறது.
பொதுவாக எந்தச் சமுதாயத்திற்கும் வணக்க வழிபாடுகள் முடிந்த பின் பொருளீட்டுவதற்குத் தடை செய்யப்படவில்லை. யூதர்களுக்கு அன்றைய வழிபாட்டு நேரம் மட்டுமின்றி முழு நாளும் பொருளீட்டக் கூடாது என்று கட்டளையிடப்பட்டிருந்தது.
முஸ்லிம்களின் வார வழிபாட்டு நாளான வெள்ளிக்கிழமையில் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்ட உடன் வியாபாரத்தை நிறுத்துங்கள்! தொழுகை முடிந்ததும் பொருளீட்ட விரையுங்கள் என்று திருக்குர்ஆன் (62:9) கூறுகிறது.
பொருளீட்டுவதை ஒரு வணக்கத்தை நிறைவேற்றுவதற்காகச் சிறிது நேரம் நிறுத்திக் கொள்ளுமாறு கூறுவதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு நாள் முழுவதும் மீன் பிடிக்கக் கூடாது என்று கூறுவதில் எந்த நியாயமும் இல்லையே? என்று சிலருக்குத் தோன்றலாம்.
இறைவன் அர்த்தமற்ற கட்டளைகளைப் பிறப்பிக்க மாட்டான் என்பதில் ஐயமில்லை. ஆனால் இவர்களுக்கு ஏன் இவ்வாறு கடுமையான சட்டம் போடப்பட்டது என்பதற்கு இவ்வசனம் விடை அளிக்கிறது.
இறைவனின் ஏராளமான அருட்கொடைகளை அனுபவித்த அந்தச் சமுதாயத்தினர் இறைவனின் மார்க்கத்தில் இருந்து கொண்டே இப்ராஹீம் நபியின் வழிக்கு மாற்றமாக அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தனர். எனவே அவர்களுக்குத் தண்டனையாகவே இந்தக் கடும் சட்டம் போடப்பட்டது.
இப்ராஹீமுக்கு முரண்பட்டோர் மீதே சனிக்கிழமை மீன் பிடிக்கக்கூடாது என்ற சட்டம் இருந்தது என்ற சொற்றொடரிலிருந்து இதை அறியலாம்.
ஒரு பள்ளிக் கூடத்தில் மாணவர்கள் அமர்ந்து படிப்பார்கள். ஆனால் தாமதமாக வரும் மாணவன் நிற்க வைக்கப்படுவதை நம் அறிவு ஏற்றுக் கொள்கிறது. தண்டனையாக வழங்கப்படும் சட்டம் கடுமையாகத்தான் இருக்க வேண்டும். அதனடிப்படையில் தான் தொழுகை நேரம் மட்டுமின்றி முழு நாளும் அவர்கள் மீன்பிடிக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.
சனிக்கிழமை மீன் பிடித்ததற்காக அவர்களைக் குரங்குகளாக மாற்ற வேண்டுமா? இது அவ்வளவு பெரிய குற்றமா என்ற சந்தேகத்துக்கும் இவ்வசனத்தில் விடை அளிக்கப்படுகிறது.
சனிக்கிழமை மீன் பிடிக்கக்கூடாது என்பது அவர்களுக்குத் தண்டனையாக வழங்கப்பட்ட கட்டளையாகும். சாதாரண நேரத்தில் பிறப்பிக்கப்பட்ட கட்டளை அல்ல.
குற்றம் புரிந்ததற்காக நீதிமன்றம் அபராதம் விதிக்கும் போது கள்ள நோட்டாகக் கொண்டு போய் அபராதம் செலுத்தினால் அதைச் சாதாரண குற்றமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்த குற்றம் செய்து அதற்கு அளிக்கப்பட்ட தண்டனையை மீறியதால் இறைவனுக்குக் கடுமையான கோபம் ஏற்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இச்சட்டம் தண்டனையாகத்தான் பிறப்பிக்கப்பட்டது.

No comments: